Bodhgaya - புத்த காயா

by Suga June. 01, 2017 450 views

பயணம் 01, ஆகஸ்ட் 2010.

வாரணாசியில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட ரயிலில் காயாவை வந்தடைய மதியம் ஆகிவிட்ட்து. காயாவில் விஷ்ணு ஆலயம் பிரசித்தமானது. ரயில் நிலையத்திலிருந்து புத்த காய 12 கிமி தொலைவில் உள்ளது. உடன் வந்த அமெரிக்க வாலிபர் 90 ரூபாய்களுக்கு ஷேர்ஆட்டோ பேசி முடித்தார். ஆளுக்கு நாற்பத்தைந்து, சூப்பர் டீல். அதிகளவான விடுதிகள் இல்லாத புத்த காயாவில் எங்கு தங்கலாம் என் யோசித்திருக்க, ஜப்பானிய மடாலயத்தில் தான் தங்கப் போவதாக நண்பர் கூறினார்.

Buddha statue at the Bangladesh monastery

Buddha statue at the Bangladesh monastery

புத்த காயா ஒரு சிறிய கிராமம். மகா போதி ஆலயமும் அதைச் சூழவுள்ள ஆலயங்களுமே கிராமத்தின் பிரதானங்கள். ஒரு நடுத்தர தங்கும் விடுதி மற்றும் ஓரிரண்டு உணவு விடுதிகள், அருகே ஒரு சந்தை இதுவே புத்த காயா. வாரணாசியின் நேர் எதிராகக் காட்சி தந்தது புத்த காயா. ஜப்பானிய மடாலயம் அவ்வேளையில் மூடப்பட்டிருந்ததால் திபெத்திய மடாலயத்தில் தஞ்சமடைந்தோம். அறை ஒன்றிற்கு 150 ரூபாய்கள், மிகவும் வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது.

மகா போதி ஆலயம் வழக்கமான பௌத்த மத ஆலயங்கள் போலல்லாமல் இந்துக் கோவில்கள் போன்ற கோபுரத்தைக் கொண்டிருந்தது. மகா போதி ஆலயத்தைத் தவிர தாய்லாந்து, பங்களாதேஷ், ஜப்பான், இலங்கை மற்றும் திபெத்து போன்ற நாடுகளது பௌத்த ஆலயங்களும் தனித்தனி வளாகங்களில் காணப்பட்டன. அவர்களது ஆலயங்கள் அவரவர் கட்டடக்கலையைச் சார்ந்து அமைக்கப் பட்டிருந்தமை பௌத்த மதத்தின் பன்முகத்தன்மையை காட்டுவதாக இருந்தது.

Thai monastery

Thai monastery

சற்று நேர ஓய்வுக்குப் பின் மாலையில் நிதானமாக கிராமத்தை சுற்றிப்பார்க்கச் சென்றேன். இப்பொழுது அந்த கிராமத்து சூழல் மிகவும் ரம்மியமானதாக இருந்தது. அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தேன். ஒரு குற்றாலத் துண்டு வாங்கும் தேவை. ஒரு சிறிய துணிகள் மற்றும் சில பொருட்கள் விற்கும் கடை ஒன்று தோதாகப் பட்டது. உரிமையாளர் மட்டுமே பணியாளர், தரையில் அமர்ந்தபடியே வியாபாரம். சேலையால் தலையை மறைத்த இரண்டு பெண்கள் ஒரு புத்தகப் பைக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் பேரம் சரிப்படாது போக உரிமையாளர் வாங்கியிருந்த சில சில்லறைகளை தரையில் வீசினார். 45 ரூபாய் பேரத்திற்குப் பின் ஒரு சில ரூபாய்கள் குறைவாக இருக்க அவர் பையை விற்க மறுத்துவிட்டார். செல்லத் திரும்பியவர்களை அப்போதுதான் கவனித்தேன். ஒருவர் தாய் மற்றவர் ஒரு சிறுமி. தாயின் முகத்தில் அவமானம் சிறுமியின் முகத்தில் ஏமாற்றம். 

இருப்பினும் நான் குற்றாலத் துண்டை மறக்கவில்லை.

Maha Bodhi

Maha Bodhi

கிராமத்தைச் சுற்றி விட்டு மகா போதி ஆலய வளாகத்திற்குள் நுழைந்தேன்.

ஆலயத்தைச் சுற்றியிருந்த இசைத்தட்டு விற்பனையாளர்கள் வெவ்வேறு பௌத்த மத மந்திரங்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். 'புத்தம் சரணம் கச்சாமி..தம்மம் சரணம் கச்சாமி..சங்கம் சரணம் கச்சாமி...' எங்கும் நிரம்பியிருந்தது. மாலை நேரம், இதமான காலநிலை மற்றும் அமைதியான கிராமத்துச் சூழல் அற்புதமான அனுபவத்தின் ஆரம்ப நிலை போலிருந்தது. குறிப்பாக முன்னிரு நாட்கள் காசியின் நேரெதிர் சூழலில் இருந்து இந்த மாற்றம், புத்தகாயா இந்தியாவின் மிக அமைதியான கிராமம் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

Maha Bodhi

Maha Bodhi

ஆலயத்தினுள் நுழைந்ததும் நேரே இருந்த புத்த பகவான் சந்நிதிக்குள் நுழைந்தேன். சற்று நேரம் தியானம் முயற்சித்து, பின் சந்நிதியைச் சுற்றி வந்தேன். சந்நிதியின் நேர் பின்புறம் யாத்திரிகர்கள் தேடி வரும் பொக்கிஷம் இருந்தது. புத்தர் பெருமான் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்ற போதி மரம் எனும் வெள்ளரச மரம் அதுவே அந்த பொக்கிஷம். அதிகமானார்களின் வழிபாடு போதி மரத்தை நோக்கியதாகவே காணப்பட்டது. போதிமரத்தினருகில் தியானம் முயற்சித்தேன். புலனடக்கம் எளிதாகக் கை கூடுவதாயிருந்தது.

Parikrama

Parikrama

திபெத்திய, இலங்கை மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பிக்குகள் அதிகளவில் காணப்பட்டனர். அனைவரும் பரிக்ரமா எனப்படும் சந்நிதியைச் சுற்றிவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். திபெத்திய பிக்குகளின் வழிபாடு கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நின்ற நிலையிலிருந்து முழுவதும் கிடையாக தரைக்குச் சென்று மீண்டும் நின்ற நிலைக்கு வர வேண்டும். இதை எவ்வளவு நேரம் அல்லது எத்தனை தடவைகள் செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். எந்த ஒரு திபெத்திய பிக்குவும் சிறிதளவேனும் உடல் பருமன் இல்லாமல் இருந்ததன் காரணம் புரிந்தது.

ஆலய வளாகத்திற்குள் இருள் சூளும் வரையில் சுற்றிவிட்டு இரவு உணவுக்குச் சென்றேன். மறுநாள் மதியம் புறப்படவிருப்பதால் அத்துடன் அந்த நாள் நிறைவுக்கு வந்தது.

மறு நாள் காலையில் மீண்டும் மகா போதி ஆலயத்திற்கு சென்று முடிந்தளவு நேரம் போதி மரத்தினடியில் அமர்ந்திருந்தேன். மிக அமைதியான காலைப் பொழுதாயிருந்தது. காலை உணவுக்குப்பின் அறைக்குச் செல்லும் வழியில் நம் அமெரிக்க நண்பரைச் சந்தித்தேன். அவர் ஒரு வாரம் புத்த காயவில் தங்கி தியான வகுப்பொன்றுக்கு செல்லவிருப்பதாகக் கூறினார். முன் பதிவு செய்யப்படட ரயில் பயணங்கள் என்பதால் எனக்கு அது சாத்தியம் இல்லை. அவரிடமிருந்து விடைபெற்று காயா ரயில் நிலையம் புறப்படத் தயாரானேன்.

அடுத்த இலக்கு பட்னா வழியாக டார்ஜீலிங்.

Join the conversation
0
Be the first one to comment on this post!
Up
Copyright @Photoblog.com